தாயின் மறைவால் தற்கொலைக்கு முயன்ற மகன்
பெலகாவி: தாயின் மறைவை தாங்க முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மகன் மீட்கப்பட்டார். பெலகாவி மாவட்டம் அம்பேவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாபு பண்டு சம்பரேகர், 41. இவரின் தாயார் கடந்த 15 நாட்களுக்கு முன், மரணமடைந்தார். திருமணம் ஆகாத பாபு பண்டு சம்பரேகர், தாயின் பிரிவை தாங்க முடியாவில் மன வேதனையில் இருந்தார். மன அழுத்தம் அதிகமானதால், நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். அப்போது கிணற்றில் குறுக்கே சென்ற கேபிளில் சிக்கிக் கொண்டதால், நீரில் மூழ்காமல் தத்தளித்தார். இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக அவசர மீட்பு பவுண்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதன் தலைவர் பசவராஜ் ஹிரேமத், கிணற்றில் தவித்த பாபு பண்டுவை மேலே வரும்படி கேட்டு கொண்டார். அவர், வர முடியாது என்று கூறியதால், பசவராஜ் ஹிரேமத் தன் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினார். பலமுறை சமாதானம் செய்தும் பாபு பண்டு சமாதானம் ஆகவில்லை. கோபமடைந்த பசவராஜ் ஹிரேமத், பாபு பண்டுவின் தலையில் அடித்து, கயிற்றை அவரின் இடுப்பில் கட்டி, மேலே துாக்கினர்.