உயிரோடு உள்ள தாய்க்கு இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்
ஹாவேரி: உயிரோடு இருக்கும்போதே, தாய்க்கு போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து, நிலத்தை அபகரித்த மகன் கைது செய்யப்பட்டார்.ஹாவேரி மாவட்டம், ஷிகாவி தாலுகாவின், காஜிகான் கல்லி கிராமத்தில் வசிப்பவர் ஹூராம்பி முல்கி, 60. இவரது மகன் ஷவுகத் அலி முல்கி, 39. ஹூராம்பி முல்கி, கணவரை இழந்தவர். மகனும் தாயை விட்டு விட்டு, ஹூப்பள்ளியில் தனியாக தன் குடும்பத்துடன் வசிக்கிறார். தாய் தனியாக வசிக்கிறார்.காஜிகான் கல்லி கிராமத்தில், இவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இது தாய் மற்றும் மகனின் பெயரில் இருந்தது. இந்த நிலத்தை அபகரிக்க ஷவுகத் அலி முல்கி, தாய் இறந்துவிட்டதாக உள்ளாட்சியில் பொய்யான ஆவணங்கள் அளித்து, இறப்பு சான்றிதழ் கோரினார். இதை நம்பிய உள்ளாட்சி அதிகாரிகள், ஜூன் 11ம் தேதி இறப்பு சான்றிதழ் அளித்தனர்.கிராமத்தினர் மூலமாக, ஹூராம்பிக்கு தகவல் தெரிந்தது. மனம் வருந்திய அவர், ஷிகாவி போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளித்தார். நிலத்தை அபகரிக்க சூழ்ச்சி செய்த மகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரினார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, ஷவுகத் அலி முல்கியை, நேற்று கைது செய்தனர்.