விண்வெளி பூங்கா நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு ரத்து; 1,000 நாள் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி
பெங்களூரு : பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக, கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இதன்மூலம் தேவனஹள்ளி உட்பட 13 கிராம விவசாயிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக, பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே சென்னராயப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, 2021ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.நிலத்தை கையகப்படுத்த 2022ம் ஆண்டில் முறைப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 13 கிராம விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். மாநில வருமானம்
ஆயிரம் நாட்களை தாண்டிய போராட்டம் நேற்று 1,198 நாளாக, தேவனஹள்ளி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடந்தது. நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை திரும்ப பெற கோரி, நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் விவசாய சங்கத்தினர் முதல்வர் சித்தராமையாவை கடந்த 4ம் தேதி சந்தித்தனர். இம்மாதம் 15ம் தேதி முடிவை அறிவிப்பதாக முதல்வர் கூறி இருந்தார்.அதன்படி நேற்று விதான் சவுதாவில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன், சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை நாங்கள் முற்றிலும் கைவிட உள்ளோம்.இதற்காக வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. சில விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுக்க தயாராக உள்ளதாக கூறி உள்ளனர்.அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படும். அவர்களுக்கு வழிகாட்டுதல் விகிதத்தை விட கூடுதலாக தொகை வழங்கப்படும்.சர்வதேச விமான நிலையம் தேவனஹள்ளியில் அமைந்துள்ளது. மாநிலத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு
புதிய முதலீடுகளை துவங்க நிலம் தேவை. தேவனஹள்ளி அருகே 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டு இருந்தது.இதற்கு முன்பு விவசாயிகள் நடத்திய இத்தகைய போராட்டத்தை நான் பார்க்கவில்லை. கையகப்படுத்த வேண்டிய நிலம் விவசாயம் செய்ய உகந்தது.விவசாயிகள் நிலத்தை நம்பி உள்ளனர். இதனால் நிலத்தை கையகப்படுத்த வேண்டாம் என்று, பல தரப்பினர் எனக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு செவிசாய்த்து உள்ளது.நிலம் கையகப்படுத்தும் நடைமுறை கைவிடப்படும்போது, வேறு மாநிலத்திற்கு வாய்ப்பாக அமையும். இருப்பினும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிலம் கையகப்படுத்துவது ரத்து என்ற, முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்கு நன்றி கூறினர். தேவனஹள்ளியில் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.