உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்; ஆசிரியை குடும்பம் ஒதுக்கிவைப்பு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்; ஆசிரியை குடும்பம் ஒதுக்கிவைப்பு

சிக்கமகளூரு : சிக்கமகளூரில் குழந்தைகள் திருமணம் குறித்து தகவல் அளித்ததாக, அங்கன்வாடி ஆசிரியரையும், அவரது குடும்பத்தினரையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம், கடூரின் யாரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கன்வாடி ஆசிரியை தேஜஸ்வினி. சில மாதங்களுக்கு முன், இந்த கிராமத்தில் சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த தேஜஸ்வினி, குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த அதிகாரிகள், போலீசார் திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். அத்துடன், மணமகன், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர். இதனால் சிறுமியின் குடும்பத்தினரும், மணமகன் குடும்பத்தினரும் தேஜஸ்வினி மீது கோபமடைந்தனர். இதையடுத்து, பஞ்சாயத்து கூட்டி, தேஜஸ்வினி அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவைப்பதாக முடிவு செய்தனர். இதையடுத்து, 2024 முதல், இவரின் குடும்பத்தினருடன் யார் பேசினாலும், அவர்களுக்கு அபாரதம் விதித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கடைக்கு சென்ற தேஜஸ்வினியின் மாமனாரை, அங்கிருந்தவர்கள் திட்டி, தள்ளிவிட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த தேஜஸ்வினி குடும்பத்தினர், பிரூர் போலீசில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் போலீசார் கிராமத்திற்குச் சென்றனர். அங்குள்ள கிராமத்தினருடன் பேச்சு நடத்திய போலீசார், 'தனி நபரையோ, குடும்பத்தையோ தள்ளி வைப்பது சட்டப்படி குற்றமாகும். புறக்கணிப்பை வாபஸ் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது' என்று எச்சரித்தனர். இதுகுறித்து ஆசிரியை தேஜஸ்வினி கூறியதாவது: கிராமத்தில் சிறுமிக்கு திருமணம் நடப்பது குறித்து, குழந்தைகள் நல பாதுகாப்புத் துறைக்கு தகவல் சென்றுள்ளது. இங்கு வந்த அவர்கள், சிறுமியின் வீட்டை, என்னிடம் கேட்டனர். நானும், சிறுமியின் வீட்டை காண்பித்தேன். சிறுமியின் திருமணத்தை நான் தான் தடுத்து நிறுத்தி விட்டதாக தவறாக நினைத்த கிராமத்தினர், எங்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விட்டனர். 2024 முதல் எங்களுடன் யாரும் பேசுவதில்லை. கோவிலுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. நான் ராஜினாமா செய்யாவிட்டால், அங்கன்வாடி மையத்தை பூட்டிவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அங்கன்வாடி ஆசிரியை தேஜஸ்வினி - மத்தியில், அவரது கணவர், மாமியாருடன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை