உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தெரு நாய் தத்தெடுப்பு திட்டம்; மைசூரு மாநகராட்சியில் அமல்

 தெரு நாய் தத்தெடுப்பு திட்டம்; மைசூரு மாநகராட்சியில் அமல்

மைசூரு: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்து, மைசூரு மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் பலர் ஆர்வமுடன் தெரு நாய்களை தத்தெடுத்தனர். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி மைசூரு மாநகராட்சி, பீப்பிள் பார் அனிமல்ஸ், கால்நடை துறை இணைந்து தெரு நாய்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி, நேற்று மைசூரு டவுன் ஹால் வளாகத்தில் நடந்தது. மைசூரு மாநகராட்சியின் ஆறாவது மண்டல கமிஷனர் பிரதிபா, இரு நாய் குட்டிகளை தத்தெடுத்து, அதற்கு பெயர் சூட்டினார். அதுபோன்று வெளிநாட்டை சேர்ந்த இரு பெண்கள், தலா ஒரு நாய் குட்டியை தத்தெடுத்தனர். மாநகராட்சி கமிஷனர் ஷேக் தன்வீர் ஆசிப் பேசியதாவது: மைசூரு நகரில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தெரு நாய்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, நாய்கள் மீது பிரியம் உள்ளவர்கள், தெரு நாய்களை தத்தெடுக்க முன்வர வேண்டும். தத்தெடுக்க ஆசைப்பட்டும் முடியாதவர்கள், நாய்களுக்கான தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்யலாம். தனி நபர்கள் மட்டுமல்ல, நிறுவனங்கள், அமைப்புகளும் கூட தத்தெடுக்கலாம் அல்லது நிதியுதவி அளிக்கலாம். ராயனகெரேயில் ஒரே நேரத்தில் 10 நாய்களுக்கு அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். முதல்கட்டமாக ராயனகெரே நாய்கள் காப்பகத்தில் 500 நாய்கள் பராமரிப்பு விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார். கால்நடை துறை உதவி இயக்குநர் பூர்ணானந்தா கூறுகையில், ''மைசூரு நகரம் மற்றும் தாலுகாவில் 50,000 தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்கள் மக்களை தாக்குவதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. இந்த தாக்குதலை கட்டுப்படுத்த, பல்வேறு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ