காதல் தொல்லையால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
பாகலுார்: சீனியர் மாணவர் காதல் தொல்லையால், கல்லுாரி மாணவி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குடகு மடிகேரியை சேர்ந்தவர் ஷனா பர்வீன், 20. பெங்களூரு பாகலுாரில் தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்தார். இக்கல்லுாரியில் படித்த கேரளாவின் ரிபாஸ், 23, என்பவர், ஷனா பர்வீனை, ஒரு தலையாக காதலித்தார். தன் காதலை ஷனா பர்வீனிடம் பல முறை வெளிப்படுத்தி உள்ளார். அவர் ஏற்கவில்லை. ஆனாலும் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி ரிபாஸ் தொல்லை கொடுத்துள்ளார். ரிபாஸ் படிப்பு முடித்து கடந்த ஆண்டு கல்லுாரியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கல்லுாரி வளாகம், பி.ஜி.,க்கும் சென்று தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தன் பெற்றோரிடம், ஷனா பர்வீன் கூறி உள்ளார். அவர்கள் கல்லுாரிக்கு வந்து, முதல்வரை சந்தித்து, ரிபாஸ் பற்றி கூறி உள்ளனர். 'பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என கல்லுாரி நிர்வாகம் கூறி இருக்கின்றனர். ஆனாலும் ரிபாஸை, கல்லுாரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. மனம் உடைந்த ஷனா பர்வீன், நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த பி.ஜி., அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஷனா பர்வீன் பெற்றோர் அளித்த புகாரில், ரிபாஸ் மீது பாகலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.