பள்ளியில் அசுத்தமான தண்ணீர் மாணவ, மாணவியர் பாதிப்பு
மங்களூரு: ஒளமொக்ரு கிராமத்தின் அரசு தொடக்கப்பள்ளியில் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்திய மாணவர்களுக்கு அலர்ஜி, அரிப்பு ஏற்பட்டுள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின், ஒளமொக்ரு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ -- மாணவியரின் பயன்பாட்டுக்காக, பள்ளி வளாகத்தில் சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள தண்ணீரை கை, கால் கழுவுவதற்கும், கழிப்பறைக்கும் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.நேற்று முன் தினம் காலையும், இந்த தொட்டி தண்ணீரை பயன்படுத்தினர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு கை, கால் அரிப்பு ஏற்பட்டது.சிவப்பு நிற கொப்பளங்கள் ஏற்பட்டு மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். தொட்டி குழாயில் இருந்து நீல நிறத்தில் தண்ணீர் வருவதை கண்ட மாணவர்கள், ஆசிரியர்களிடம் கூறினர்.அவர்கள் வந்து தொட்டியை பார்வையிட்டபோது, தண்ணீர் முழுமையாக நீல நிறத்தில் மாறியிருப்பது தெரிந்தது.இதை பயன்படுத்தியதால், மாணவர்களுக்கு கை, கால்களில் அரிப்பு ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர்.பள்ளி மேம்பாட்டு கமிட்டி தலைவர் கணேஷ், கிராம பஞ்சாயத்து தலைவி திரிவேணி, சுகாதாரத்துறை அதிகாரி வித்யாஸ்ரீ உட்பட, அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்னர். சுகாதார அதிகாரிகள் தொட்டியில் இருந்த தண்ணீரின் மாதிரியை சேகரித்து, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பினர்.தொட்டியை முழுவதுமாக காலி செய்து, சுத்தம் செய்து வேறு தண்ணீரை நிரப்ப ஏற்பாடு செய்தனர்.தொட்டி நீரில் மர்ம நபர்கள், ரசாயனத்தை கலந்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. ஆய்வக அறிக்கை வந்த பின், போலீசாரிடம் புகார் அளிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.