நீட் விவகாரத்தில் அரசியலை மாணவர்கள் விரும்பவில்லை
- நமது நிருபர் -: ''நீட் விவகாரத்தில் செய்யப்படும் அரசியலை மாணவர்கள் விரும்பவில்லை,'' என பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா லோக்சபாவில் நேற்று பேசினார். லோக்சபாவில் நேற்று நடந்த தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா விவாதத்தில், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேசியதாவது: நம் நாட்டில் போட்டி தேர்வுகளை நம்பியே லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்காகவே நியாயமான முறையில் தேர்வுகள் நடத்த வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை மாணவர்கள் விரும்பவில்லை. நீட் விவகாரத்தில் மாணவர்கள் தீர்வுகளை மட்டுமே விரும்புகின்றனர். நீட் விவகாரத்தில் செய்யப்படும் அரசியலை விரும்பவில்லை. போட்டி தேர்வு முறையை வலுப்படுத்தும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. வரும் காலத்தில் வினாத்தாள் கசிவை தடுக்கவே தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்டில் நடக்கும் விவாதத்தை லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்த கட்சி, என்ன ஆட்சி என்பதெல்லாம் முக்கியமல்ல. தங்கள் எதிர்காலத்துக்கு ஏற்ற முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து உள்ளனர். அவர்களின் நோக்கம் நிறைவேறும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாணவர்களின் எதிர்காலத்தை காக்கும். இவ்வாறு அவர் பேசினார்.