நட்சத்திர ஹோட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு
பெங்களூரு: பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு தரத்தை பரிசோதித்தனர். இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூன்று நட்சத்திரம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு தரமாக இல்லை என்பது குறித்து, எங்கள் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை ஆய்வு செய்ய, சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக அதிகாரிகள் கொண்ட, தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு மாதிரிகளை சேகரித்து, தரம் பரிசோதனை செய்யும் பணிகளில், அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்துவது, தரமற்ற உணவு வினியோகிப்பது தெரிந்தால், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் தற்போது மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். நட்சத்திரஅந்தஸ்து ஹோட்டல்கள் உட்பட, அனைத்து உணவகங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை மட்டுமே வழங்க வேண்டும். உணவு தயாரிக்க தரமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.