கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரமங்கை சுமலதா
ஹைதர் அலி ஆட்சியில் சித்ரதுர்கா கோட்டையில் நுழைய முயன்ற எதிரிகளை உலக்கையால் அடித்து விரட்டியவர் ஒனகே ஒபவ்வா. துணிச்சலான வீராங்கனையாக இன்றும் போற்றப்படுகிறார். இவரது பாணியில், ஒரு வீரமங்கை, கொள்ளையர்களை விரட்டி அடித்து உள்ளார். தாவணகெரேயின் சென்னகிரி சிரடோனி கிராமத்தில் வசிப்பவர் சத்யநாராயணா. இவரது மனைவி சுமலதா. இவர் வீட்டில் 80 வயது பாட்டியும் வசிக்கிறார். கடந்த 14 ம் தேதி அந்தி சாயும் மாலை நேரத்தில், வீட்டின் விளக்கு ஏற்றி விட்டு ஒரு அறையில் இருந்தார் சுமலதா. வீட்டிற்குள் யாரோ வந்தது போல அவரது மனதில் ஒரு நெருடல். பாட்டியிடம் சென்று சொன்ன போது, அது பூனையாக இருக்கும். வேறு வேலை இருந்தால் பார் என்று சொல்ல .... சுமலதாவுக்கோ மன திருப்தி இல்லை. இருந்தாலும் பேத்திக்காக, பாட்டி வாசல் அருகே சென்று பார்க்க... மளமளவென வீட்டிற்குள் நுழைந்தனர் மூன்று பேர். பாட்டியை பிடித்து தள்ளி அவரது கழுத்தில் இருந்த நகைகளை அறுத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த, சுமலதாவையும் பிடித்து தள்ளி, அவரது கழுத்திலும் கை வைத்தனர் மூன்று பேரும். தாலி செயினை இறுக பிடித்து கொண்டு, தனது மன உறுதியை காட்டினார் சுமலதா. கோபத்தில் கொள்ளையர்களில் ஒருவர், தேங்காய் உரிக்க பயன்படுத்தும் சிறிய கத்தியை ஓங்க, அந்த கத்தியை மடக்கி பிடித்து கொள்ளையனை தாக்கினார் சுமலதா. அடி தாங்க முடியாமல் ஒரு கொள்ளையன் ஓட, அவரை பின்தொடர்ந்து மேலும் இரண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் சுமலதா விடவில்லை. 'டேய் உங்களை கொல்லாமல் விட மாட்டேன்' என்று, ஆவேசத்தில் காளியாக மாறி உள்ளார். அய்யோ சாமி ... தப்பித்தால் போதும் என்று துண்டை காணும் ... துணியை காணும் என்று மூன்று பேரும் ஓடியே விட்டனர். சுமலதா கூறிய அடையாளத்தின் படி, சிரடோனி கிராமத்தில் மூன்று பேரை கைது செய்தது போலீஸ். கொள்ளையர்களை விரட்டியது பற்றி சுமலதா கூறுகையில், ''ஆபத்தான நேரத்தில் பெண்கள் பயப்பட கூடாது. பயம் தான் நமக்கு முதல் எதிரி. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும். பெண்கள் வலிமையாக இருக்க வேண்டும். தைரியமாக இருந்தால், நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது,'' என்றார். - நமது நிருபர் -