உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாட்சிகளை கலைக்க குல்கர்னி முயற்சி ஜாமினை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

சாட்சிகளை கலைக்க குல்கர்னி முயற்சி ஜாமினை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், சாட்சியை கலைக்க முற்பட்டதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ்கவுடா. இவர் 2016 ஜூன் 15ம் தேதி, தனக்கு சொந்தமான உடற்பயிற்சி மையத்தில் இருந்தபோது, மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது மாநில அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ.,

முதலில் இந்த வழக்கை மாநில போலீசார் விசாரணை நடத்தினர். 2020ல் அன்றைய பா.ஜ., அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது.சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியதில், யோகேஷ் கவுடா கொலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். 2020 ஜூன் 5ம் தேதி, அவரை சி.பி.ஐ., கைது செய்தது.ஜாமின் கோரி, பல முறை தார்வாட் நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி மனுத் தாக்கல் செய்தார். மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதன்பின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தை நாடினார். அங்கும் ஜாமின் கிடைக்கவில்லை. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினார்.தார்வாடுக்கு செல்லக்கூடாது; சாட்சிகளை கலைக்கக் கூடாது; அதிகாரிகள் அழைக்கும்போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, நிபந்தனை விதித்து, 2-021 ஆகஸ்ட் 11ல் ஜாமின் வழங்கியது.

வெற்றி பெற்றும்

ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த அவர், ஜாமினில் வெளியே வந்தார். 2023 சட்டசபை தேர்தலில், தார்வாட் தொகுதியில் போட்டியிட்டார். தொகுதிக்கு செல்ல முடியாததால், இவருக்காக மனைவி பிரசாரம் செய்தார்.அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், வினய் குல்கர்னிக்கு, முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. கொலை வழக்கில் இவருக்கு தொடர்பிருப்பதே, முக்கிய காரணமாக இருந்தது.இதற்கிடையே யோகேஷ் கவுடா கொலை வழக்கில் இருந்து, விடுபட வினய் குல்கர்னி முயற்சிக்கிறார். சாட்சிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதையறிந்த சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த விஷயத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரது ஜாமினை ரத்து செய்யும்படி கோரியது.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வினய் குல்கர்னியின் ஜாமினை, நேற்று ரத்து செய்தது. ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை