3 மாதம் அவகாசம் கேட்கிறது ஆணையம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: 'வார்டு மறு சீரமைப்புக்கான இறுதி அறிவிப்பை, நவ., 15க்குள்ளும், வார்டு இடஒதுக்கீட்டை டிச., 15ம் தேதிக்குள்ளும் அறிவிக்க வேண்டும்' என்று மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தல் இப்போதைக்கில்லை என தெளிவாகிறது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் சிவராஜு உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூயான், ஜாய்மல்யா பாக்சி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி ஆகியோர் வாதிட்டதாவது: கர்நாடகாவில் சமூகம், கல்வி ஆய்வு நடத்தும் பணியில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே வார்டு மறு சீரமைப்பு செயல்முறைக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இப்போது அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வார்டு மறு சீரமைப்பு பணிகள் நவ., 15ம் தேதிக்குள்ளும்; வார்டு இடஒதுக்கீடு பட்டியல், டிச., 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் பனீந்திரா வாதிடுகையில், ''தேர்தலுக்கான செயல்முறையை ஆணையம் துவங்கி உள்ளது. மேலும் மாவட்டம், கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமித்து உள்ளது. இருப்பினும், தேர்தலை நடத்த ஆணையத்துக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களாகும்,'' என்றார். மனுதாரர் தரப்பு வக்கீல், 'பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. அரசு தாமதப்படுத்தி வருகிறது' என்றார். நீதிபதிகள் அமர்வு, 'வார்டு மறு சீரமைப்புக்கான இறுதி அறிவிப்பை, நவ.,15க்குள்ளும், வார்டு இடஒதுக்கீட்டை டிச., 15ம் தேதிக்குள்ளும் வெளியிட அரசுக்கு அவகாசம் கொடுங்கள்' என கூறி, விசாரணையை ஒத்தி வைத்தனர். இதன் மூலம் இப்போதைக்கு தேர்தல் நடக்காது என்பது தெளிவாகிறது.