ஐஸ்வர்யா கவுடா மோசடி விசாரணைக்கு சுரேஷ் ஆஜர்
பெங்களூரு : நகைக்கடைகளில் நகை வாங்கி ஐஸ்வர்யா கவுடா மோசடி செய்த வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.'துணை முதல்வர் சிவகுமார் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ், என் சகோதரர்' என கூறி, பல நகைக் கடைகளில் நகை வாங்கி ஐஸ்வர்யா கவுடா, 33, மோசடி செய்தார். இந்த வழக்கில், அவரை, பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீசார் கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிந்ததால் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.ஐஸ்வர்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னாள் எம்.பி., சுரேஷும் கடந்த மாதம் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனால் நேற்று காலை 11:00 மணிக்கு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுரேஷ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.பின், சுரேஷ் அளித்த பேட்டியில், ''என் சொத்து தொடர்பான ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் கேட்டனர். ''அவர்களுக்கு கொடுத்து உள்ளேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து, முழுமையாக ஒத்துழைத்துள்ளேன். எனக்கும், ஐஸ்வர்யா கவுடாவுக்கும் எந்த உறவும் இல்லை. ஆனாலும் இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க சிலர் நினைக்கின்றனர். அவர்கள் விசாரிக்கட்டும். ஒத்துழைக்க நான் தயார்,'' என்றார்.