| ADDED : டிச 08, 2025 06:13 AM
- நமது நிருபர் -: தமிழ் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமின்றி மற்ற விஷயங்களும் கிடைப்பதும் தான் அதன் சிறப்பே. அவ்வகையில், புத்தக திருவிழாவில் அரிதான கடை உள்ளது. இந்த கடையில் மற்றவர்களுக்கு பரிசளிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. இந்த பரிசு மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வல்லமை கொண்டது. ஆம். இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் ஸ்டால் வைக்கப்பட்டு உள்ளது. இது இந்திய அரசுக்கு சொந்தமானது. இங்கு, தேசம் முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள், அவர்கள் வாழும் பகுதியில் கிடைக்கூடிய பொருட்களை வைத்து செய்யும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேட்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா. பொருட்களை நேரில் பார்த்தால் இன்னும் பிரமிப்பாக இருக்கும். தேசத்தின் எந்த வசதியும் கிடைக்காத ஏதோ ஒரு மூலையிலிருந்து, செய்யும் பொருட்களை நாம் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவது சாதாரண விஷயமா என்ன. இங்கு, தமிழகத்தின் நீலகிரியில் இருந்து மூலிகை பொருட்கள், கர்நாடகாவின் துணிகள், சத்தீஸ்கரின் உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்கள், குஜராத்தின் வீட்டு அலங்கார பொருட்கள், 'பைல்', நாகாலாந்தின் யோகா மேட் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 200 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மலைவாழ் மக்களின் நலனுக்காக உபயோகிக்கப்படும். இந்த கடையின் விற்பனை பிரதிநிதி காக்ஸ் டவுனை சேர்ந்த ரமேஷ் பாபு கூறியதாவது: இங்கு விற்கப்படும் அனைத்தும், மலை வாழ் மக்கள் செய்தவையே. இந்திய அரசின் கடை என்பதால் கலப்படத்திற்கு இடமில்லை. இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலை வாழ் மக்கள் செய்யும் பொருட்களை, அவர்களிடம் பணம் கொடுத்து அரசு வாங்கி கொள்ளும். பின், இந்த பொருட்கள் விற்பனைக்கு வரும். மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திலும் கிளை கடை உள்ளது. பல மாநிலங்களிலும் உள்ளது. நான் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.