கர்நாடகா, கேரளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் தமிழக வாலிபர் கைது
மைசூரு: உத்தர கன்னடாவில் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தை சேர்ந்த வாலிபரை, மைசூரில் போலீசார் கைது செய்தனர்.'உத்தர கன்னடா மாவட்டம், பட்கல் டவுன் குண்டு வைத்து தகர்க்கப்படும்' என, பட்கல் டவுன் போலீசாருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 'இ-மெயில்' மூலம் மிரட்டல் கடிதம் வந்தது.விசாரணையில் இறங்கிய போலீசார், இ -- மெயில் முகவரி, ஐ.பி., தகவலை சேகரித்தனர். இதுபோன்று மைசூரு, பல்லாரி, கேரள போலீசாருக்கும் மிரட்டல் சென்றுள்ளது.கர்நாடகா - கேரளா போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட நபர், மைசூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்தபோது, தமிழகத்தை சேர்ந்த கண்ணன் குருசாமி என்றும், அவரது மொபைல் போன் மூலம், மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. மைசூரு, பல்லாரி, கேரள போலீசாருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.மைசூரு, பல்லாரி, கேரள மாநில போலீசாரும், இவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.