எதிர்பார்த்ததை விட வரி வசூல் குறைவு ; உண்மையை ஒப்புக்கொண்டார் முதல்வர்
பெங்களூரு; “நாங்கள் எதிர்பார்த்ததை விட வரி வசூல் குறைவாக உள்ளது,” என, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா ஒப்புக்கொண்டார்.சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 3ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. நிதித் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா 7ம் தேதி 2025 - 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி இருந்தனர். எதிர்க்கட்சியினர் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினர்.நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது: 3வது இடம்
இம்முறை 4,09,549 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். இது முந்தைய ஆண்டை விட 10.3 சதவீதம் அதிகம்.கர்நாடகா நாட்டின் மக்கள்தொகையில் 8வது இடத்தில் இருந்தாலும், வரி வசூலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழகத்திற்கு பிறகு ஐந்தாவது பெரிய பட்ஜெட் எங்களுடையது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025ம் ஆண்டுக்கான 48.21 லட்சம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் 50.65 லட்சம் கோடி ரூபாய் என்றும், வளர்ச்சி விகிதம் 5.06 சதவீதம் என்று விளக்கினார்.நாங்கள் எதிர்பார்த்ததை விட, மாநிலத்தில் வரி வசூல் சற்று குறைவாக உள்ளது. நாட்டில் ஏற்படும் பல முன்னேற்றங்கள் மாநிலத்தை பாதிக்கின்றன. 100 லட்சம் கோடி
வாக்குறுதித் திட்டங்களுக்கு 51,000 கோடி ரூபாய்; விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்க 18,000 கோடி ரூபாய்; சமூக ஓய்வூதிய திட்டங்களுக்கு 10,835 கோடி ரூபாய்; வீடு கட்ட மானியத்திற்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம்.மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாயை நலத்திட்டங்களுக்கு செலவிட்ட பிறகும் மாநிலத்தின் நிதி நிலை நன்றாக உள்ளது.மத்தியில் பா.ஜ., அரசு வந்ததில் இருந்தது, மாநிலங்களின் பொருளாதார நிலைமை கடினமாகிவிட்டது.மன்மோகன் சிங் அரசு பதவி விலகியபோது, அனைத்து மாநிலங்களின் மொத்த கடன் 25.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது கடன் அதிகரித்துள்ளது.இந்த மாத இறுதிக்குள் 83.32 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 லட்சம் கோடியை தாண்டிவிடும்.நான் இதுவரை 16 பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். அது சாதனைக்காக இல்லை.மக்கள் நலனுக்காக கர்நாடகாவை விட பா.ஜ., ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.