சமஸ்கிருத பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் கைது
பெங்களூரு: ''சமஸ்கிருத பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். சித்ரதுர்கா மாவட்டம், ஸ்ரீகுரு திப்பேசுவாமி கோவிலுக்கு உட்பட்ட சமஸ்கிருத பள்ளியில் சில மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இதில், தருண் என்ற மாணவர், தன் பாட்டியுடன் மொபைல் போனில் பேசியுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் வீரேஷ் ஹிரேமத், மாணவர் பேசி முடித்ததும், மாணவரிடம், 'எதற்காக மொபைல் போனில் பேசினாய்?' என கேட்டு, சரமாரியாக தாக்கினார். மாணவர் வலியால் துடித்தபோதும் விடாமல், கீழே விழுந்த மாணவரின் வயிற்றில் எட்டி உதைத்தார். இதை அங்கிருந்த மற்றொரு மாணவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ பரவியது. இதை பார்த்த மாணவர்களின் பெற்றோர், நாயகனஹட்டி போலீசில் புகார் செய்தனர். இதையறிந்த வீரேஷ் ஹிரேமத், தலைமறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், ''மாணவர் தாக்கப்படும் வீடியோ என்னை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. குழந்தைகளிடம் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்பேன். இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, என் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''கர்நாடகாவில் 37 வேத சமஸ்கிருத பள்ளிகள் உள்ளன. இரண்டு பள்ளிகள் மட்டுமே, துறை சார்பில் நடத்தப்படுகின்றன. மற்றவை தனியாரால் நடத்தப்படுகின்றன. சித்ரதுர்கா சம்பவம், ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது. இது தொடர்பாக அறிக்கை கேட்டு உள்ளேன். அறிக்கை கிடைத்துடன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.