உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுவன் மீது கொடூர தாக்குதல் ஆசிரியர் தம்பதி வெறிச்செயல்

 சிறுவன் மீது கொடூர தாக்குதல் ஆசிரியர் தம்பதி வெறிச்செயல்

பாகல்கோட்: மனநலம் பாதிக்கப்பட்டோரின் உறைவிட பள்ளியில் இருந்த, 16 வயது சிறுவனை, அங்குள்ள ஆசிரியரும், அவரது மனைவியும் கொடூரமாக தாக்கியதை கண்டித்து பள்ளி முன் கிராமத்தினர் குவிந்து போராட்டம் நடத்தினர். பாகல்கோட் நவநகரின் 54வது செக்டரில், தனியார் சார்ந்த திவ்ய ஜோதி மனநலம் பாதித்தோரின் உறைவிட பள்ளியில் மஹாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் இங்களகர் என்பவர் ஆசிரியராகவும், அவரது மனைவி மாலினி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இப்பள்ளியில் உள்ள மனநலம் சரியில்லாத சிறார்களை, வேலை வாங்குகின்றனர். செய்ய மறுத்தால், கொடூரமாக தாக்குகின்றனர்.இப்பள்ளியில் உள்ள தீபக் ராத்தோட், 16, என்பவரை இதே காரணத்திற்காக, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தம்பதி கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவரது மனைவி மாலினியும், சிறுவனின் கண்களில் மிளகாய் பொடி துாவி கொடுமைப்படுத்தியுள்ளார். இதையறிந்து அங்கு வந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் மிரட்டியுள்ளனர். இந்த தகவல் அறிந்த கிராமத்தினர், மற்ற சிறார்களின் பெற்றோர் நேற்று காலை பள்ளி முன் போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த நவநகர் போலீசார், ஆசிரியர் தம்பதியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. தீபக் ராத்தோடின் பெற்றோர் கூறியதாவது: நாங்கள் மாதந்தோறும், 6,000 ரூபாய் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், எங்கள் பிள்ளைகளை கழிப்பறை, குளியலறையை சுத்தம் செய்ய வைக்கின்றனர். மறுத்தால் பெல்ட், பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்குகின்றனர். கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்கின்றனர். எங்கள் மகனை மட்டுமல்ல, பலரையும் இதே போன்று தாக்கியுள்ளனர். இந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி