உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி சர்வேக்கு சென்ற ஆசிரியை ஏரியில் சடலமாக மீட்பு

ஜாதிவாரி சர்வேக்கு சென்ற ஆசிரியை ஏரியில் சடலமாக மீட்பு

கோலார்: ஜாதிவாரி சர்வே பணிக்கு சென்று, காணாமல் போன ஆசிரியையின் சடலம், ஏரியில் மிதந்தது. கோலார் நகரின், மஹாலட்சுமி லே - அவுட்டில் வசித்தவர் அக்தர் பேகம், 50. இவர் கே.பி.ஹொசஹள்ளி கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கர்நாடக அரசு நடத்தும், ஜாதிவாரி சர்வே பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில், இவரும் ஒருவர். இரண்டு நாட்களுக்கு முன்பு, கோலாரின், நரசாபுரா கிராமத்துக்கு சர்வே நடத்த செல்வதாக, குடும்பத்தினரிடம் கூறி சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை . பீதியடைந்த குடும்பத்தினர் தேட துவங்கினர். மற்றொரு பக்கம், கல்வித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தேடினர். அவரை பற்றி எந்த தகவலும் தெரியாததால், கோலார் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, அக்தர் பேகமை தேடினர். தங்கவயல் தாலுகாவின், ஐபள்ளி ஏரியில் நேற்று காலை அவரது சடலம் மிதந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது, தற்போதைக்கு தெரியவில்லை. ஜாதி வாரி சர்வே பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், சர்வே நடத்த வேண்டிய வீடுகளை கண்டுபிடிக்க முடியாமல் அவதிப்பட்டார். நிர்ணயித்த நாட்களுக்குள் சர்வே பணியை முடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் அக்தர் பேகம் மன அழுத்தத்துக்கு ஆளானதாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதே காரணத்தால், அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி