உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பெலகாவியில் அவசர தரையிறக்கம்

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பெலகாவியில் அவசர தரையிறக்கம்

பெலகாவி: 'ஸ்டார் ஏர்' நிறுவன விமானம், பெலகாவியில் இருந்து மும்பைக்கு புறப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் பெலகாவியிலேயே அவசரமாக தரை இறக்கப்பட்டது. பெலகாவி விமான நிலையத்தில் இருந்து, ஸ்டார் ஏர் நிறுவனத்தின் விமானம், நேற்று காலை 7:50 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டது. இதில் 48 பயணியர் இருந்தனர். விமானம் பறக்க துவங்கிய சிறிது நேரத்தில், விமானத்தின் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கவனித்த பைலட், உடனடியாக உஷாராகி விமானத்தை, 15 நிமிடங்களில் பெலகாவி விமானத்திலேயே, அவசரமாக தரையிறக்கினார். பைலட்டின் புத்திசாலித்தனத்தால், பயணியர் உயிர் தப்பினர். ஸ்டார் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம், மாற்று விமானம் ஏற்பாடு செய்து, பயணியரை மும்பைக்கு அனுப்பியது. தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வதில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெலகாவி விமான நிலைய நிர்வாக இயக்குநர் தியாகராஜன் அளித்த பேட்டி: ஸ்டார் ஏர் விமானம், நேற்று காலை 7:50 மணிக்கு பெலகாவியில் இருந்து. மும்பைக்கு புறப்பட்டது. இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் பெலகாவி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இன்ஜினியர்கள் வந்துள்ளனர். விமானத்தில் என்ன கோளாறு என்பதை ஆய்வு செய்கின்றனர். பயணியருக்கு மாற்று விமான வசதி செய்யப்பட்டது. பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில், சிலர் மும்பைக்கு சென்றனர். சிலர் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். விமானத்தில் பயணம் செய்ய இருந்த சீனிவாஸ் பவார் கூறியதாவது: நேற்று காலை 7:50 மணிக்கு, விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில், விமானம் திடீரென திரும்பியது; மிகவும் பயந்துவிட்டோம். அப்போது பைலட், 'மீண்டும் பெலகாவியில் எமர்ஜென்சி லேண்டிங் செய்கிறோம்' என அறிவித்தார். பைலட் அப்படி கூறியதும், எங்களுக்கு ஆமதாபாதில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் பிழைத்தோம். இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, துவாரகாநாத்தில் கிருஷ்ணரை தரிசிக்க வேண்டியிருந்தது. விமானம் தாமதமானதால் பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை