ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம்
பெங்களூரு: ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் அழைத்த கிராம மேம்பாட்டு துறை செயல் நிர்வாக பொறியாளருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 50,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகாவின் பாளம்பீடா கிராம பஞ்சாயத்தில் திடக்கழிவு மறு சுழற்சி மையம் கட்டவும், நிர்வகிக்கவும் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை டெண்டர் அழைத்தது. இதில் ஹாவேரி மாவட்டத்தின், ராணி பென்னுாரை சேர்ந்த ஒப்பந்ததாரர் கோபி கொல்லர் பங்கேற்று, டெண்டரை பெற்றார். நடப்பாண்டு மே 27ல், பணிகளை துவக்க உத்தரவு கடிதமும் வழங்கப்பட்டது. அவரும் பணிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இதே பணி எஸ்.சி., பிரிவு ஒப்பந்தாரருக்கு ஒதுக்கப்பட்டது என, கூறி மற்றொரு டெண்டர் அழைத்து, செப்டம்பர் 9ல் கிராம மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் துறை அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கோபி கொல்லர், மனு தாக்கல் செய்தார். வாத, பிரதிவாதங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், 'ஏற்கனவே பணிகள் குறித்த டெண்டர் முடிவு செய்து, பணிகள் துவங்கப்பட்டது கிராம மேம்பாட்டு துறை செயல் நிர்வாக பொறியாளருக்கு தெரிந்திருந்தும், அதே பணிக்கு புதிதாக டெண்டர் அழைத்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சட்ட விரோதம்; அலட்சியத்தின் வெளிப்பாடு. எனவே இரண்டாவது டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு கிராம மேம்பாட்டு துறை செயல் நிர்வாக பொறியாளருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அபராத தொகையை, கிராம மேம்பாட்டு துறை செயல்நிர்வாக பொறியாளர் தன் சொந்த பணத்தில் இருந்து, மனுதாரருக்கு சட்ட போராட்ட செலவாக வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர் அடுத்த 180 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.