தங்கவயல் செக்போஸ்ட்
உள்ளூரா, வெளியூரா?
சிலிகான் சிட்டியில் 5 மாநகராட்சியை ஏற்படுத்த, 5 ஆண்டு தேர்தலே நடத்தல. இது போல சில காரணங்களால் கோலாரு ஜில்லா, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்தாமல் காலம் தள்ளிட்டாங்க. அதிகாரிகள் பொறுப்பில் ஆளுறாங்க. கோல்டு நகரின் நகராட்சி பதவிக் காலம் அக்டோபரில் முடிந்து, இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்தியாகணும். கோல்டு சிட்டியில் 35 வார்டுகளிலும் கவுன்சிலராக இருந்தவங்கள விட புதுசா போட்டியிட போறவங்க தான், தேர்தலை சந்திக்க ஆர்வமாக இருக்காங்க. இதுவும் ஒரு சூதாட்டம் போல; லட்சத்தில் செலவழிக்க காத்திருக்காங்க. சேவையை மட்டுமே காட்டி ஓட்டு வாங்குறவங்க யாராவது ஒருத்தர் டிபாசிட் வாங்கினால், ஜனநாயகம் வாழ்வதாக அறியலாம். 35 வார்டிலும் மண்ணின் மைந்தர்கள் தான் போட்டியிடுவது வழக்கம். அசெம்பிளி தேர்தல் போல இதையும் விட்டுக் கொடுத்து, வெளியூர்காரர்கள் கையில் ஒப்படைக்காமல் பார்த்துக்குவாங்களா?
நிலம் விற்பனை
கோல்டு மைன்ஸ் தலைமை நிலையம் சொர்ண பவன் வெறிச்சோடி கிடப்பதாக சொல்றாங்க. பெரிய ஆபீசர்கள் எல்லோரையுமே தேசிய கேபிடலுக்கு வர வெச்சிட்டாங்க. அங்கு என்னமோ நடக்க போகுது, எல்லாமே மர்மமாக இருக்குதுன்னு அந்த வட்டார தகவல்கள் பரபரவென இருக்குது. கோல்டு மைன்ஸை மீண்டும் இயக்கி 'கோல்டு' உற்பத்தி செய்ய போவதாக பரப்பிய தகவலுக்கு பின், புது புது கட்டுக்கதைகளும் வெளியே கசியுது. புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்த கோல்டு மைன்ஸ் நிலம், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கைமாறும் கதை தான் புதுசா இருக்குது. ஆதார பூர்வமாக மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பு வரும் வரை கதையா; கற்பனையா; நிஜமா என்பதை உறுதியாக நம்ப முடியும்னு ஜனங்க சொல்றாங்களே!
கனிமம் கடத்தல்?
கோல்டு சிட்டிக்கு 30 கி.மீ., துாரமும், ஆந்திராவின் வி.கோட்டாவுக்கு அரை கி.மீ., துாரமும் உள்ள இடத்தில் கோல்டு சிட்டி தொகுதியின் 'ஏபிஎம்சி' எனும் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்தும் கிடங்கு ஏற்படுத்துறாங்க. இதன் பணிகள், தொடர்ந்து 10 மாதமாக நடந்தவாறு இருக்குது. இது கோல்டு சிட்டி தொகுதிக்கு பயன்படுதோ இல்லையோ, அண்டை மாநிலத்துக்கு தான் பிரயோஜனமா இருக்க போகுதுன்னு, அதிருப்தி காட்டுறாங்க. இந்த ஏபிஎம்சி நிலத்தின் பொக்கிஷமா 'கிரானைட்' கிடைச்சது. இதனை அண்டை மாநிலத்துக்கு லாரி லாரியாக கொண்டு செல்வதாக அரசுக்கு பலர் புகார் செய்தாங்க. அந்த புகாரால், யாரும் தடுக்காமல் பாத்துக்கொள்ள முக்கிய புள்ளிகளுக்கு சேர வேண்டியவை போய் சேருதாம். கனிமத்தின் வருமானம் அரசுக்கு நஷ்டம் ஆவதை கழுகு பார்வையில் பார்க்க வேண்டியவங்க, நமக்கென்ன போச்சுன்னு நடிக்கிறாங்களா?
போலீசாருக்கு நாய்க்கடி
தங்கமான முனிசி.,யை 1964ல் ஏற்படுத்தினாங்க. இன்று வரை, அதன் எல்லை எது என்ற ஒரு அறிவிப்பு பலகையை எங்குமே வைக்கல. நுழைவு வாயில் ஏற்படுத்த வாதங்கள் நடந்தும், தீர்மானம் நிறைவேற்றியும் அமலுக்கு வரவில்லையே. ஏதோ கவுன்சில் கூட்டம் நடக்குது. பேசுவோர் பேசுறாங்க; கேட்கிறவங்க கேட்கிறாங்க. அவை நீர் மேல் எழுத்தாக உள்ளது. தெரு நாய்கள் தொல்லை; இன பெருக்கம் பற்றி நையாண்டி செய்து கூட்டத்தில் காமெடி செய்தாங்களே தவிர, நாய்கள் இனப்பெருக்கத்தை தடை செய்யல. ஒரே வாரத்தில், 10 போலீசாரை தெருநாய்கள் கடித்திருக்கு. இதுக்கு யார் பொறுப்பு?