உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட தட்டகெரே ஏரி

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட தட்டகெரே ஏரி

பெங்களூரில் வசிப்பவர்கள் வார இறுதி நாட்களில், குடும்பத்தினருடன் எங்கேயாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பர். அதுவும் ஒரே நாளில் திரும்பி வர கூடிய இடங்களை அதிகம் தேர்வு செய்வர். இவர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது தட்டகெரே ஏரி. பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகா ஹரோஹள்ளி அருகே சிவபுரா கிராமத்தில் தட்டகெரே ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக, பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்கா உள்ளது. மலைகளுக்கு நடுவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த ஏரி, வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரிக்குள் முதலை இருப்பதாக கூறப்படுவதால், ஏரிக்குள் இறங்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி கிடையாது. கரையில் அமர்ந்து ஏரி, மலையின் அழகை கண்டு ரசிக்கலாம். பல வகையான பறவைகளின் வாழ்விடமாகவும் இந்த ஏரி உள்ளது. ஏரிக்கரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்தும், குடும்பத்தினருடன் அரட்டை அடித்தும் நேரத்தை போக்க சிறந்த இடமாக உள்ளது. பெங்களூரு நகரில் இருந்து காரில் செல்லும் போது, பல கிராமங்களை கடந்து இந்த ஏரிக்கு செல்ல வேண்டும். இதனால் கிராம மக்களின் வாழ்க்கை முறையை கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஏரிக்கரையில் கனிவே மாதேஸ்வரா கோவில் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. சுற்றுலா பயணியர் ஏரிக்குள் இறங்குகின்றனரா என்பதை கண்காணிக்க, வன காவலர் பணியில் இருப்பார். இதனால் ஏரிக்குள் இறங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏரியின் அருகில் கடைகள், உணவகங்கள் இல்லை. வீட்டில் இருந்தே உணவுகள், ஸ்நாக்ஸ் எடுத்து செல்வதும் நல்லது. அதிகாலையில் சென்று விட்டால் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த ஏரிக்கு மாலை 5:00 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உண்டு. எப்படி செல்வது? பெங்களூரு நகரில் இருந்து தட்டகெரே 55 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பன்னர்கட்டா அல்லது ஜிகனி செல்லும் பஸ்சிலும் சென்று, பன்னர்கட்டாவில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் தட்டகெரே ஏரிக்கு செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ