என் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் ம.ஜ.த., மாஜி எம்.எல்.ஏ., காட்டம்
மைசூரு : ''கே.ஆர்., நகர் தொகுதிக்கு நான் கொண்டு வந்த திட்டத்தை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து உள்ளார்,'' என தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சாரா மகேஷ் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, இத்தொகுதிக்கு 215 கோடி ரூபாய் நிதி கொண்டு வந்தேன். கே.ஆர்., தொகுதியில், முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்த திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய்க்கு தான் டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மலர் துாவப்பட்டு உள்ளது. 'என் பாவங்களின் பானை நிரம்பி உள்ளது' என்று முதல்வர் கூறியுள்ளார். தோல்வி அடைந்த அனைவரின் பாவங்களின் பானையும் நிரம்பி உள்ளது. சித்தராமையா எத்தனை முறை தோற்றார். அவரின் பானை நிரம்பி உள்ளதா. பால், டீசல், பெட்ரோல், மதுபானம் என பல பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தொகுதி வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளாக ஒவ்வொரு வீடாக சென்று பணியாற்றி வருகிறேன்.சித்தராமையாவை நிதியமைச்சர் ஆக்கியது தேவகவுடா தான். அவரை பார்த்து முதல்வர் ஜாதி வெறியர் கூறுகிறார், நீங்கள் தான் சமூக தலைவரா. கர்நாடகா மாநிலத்தின் கடன் 7 லட்சத்து 81 ஆயிரத்து 54 கோடி ரூபாய். இதில், சித்தராமையாவால், 4.95 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொது விவாதத்துக்கு தயாரா.சித்தராமையாவின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். மைசூரு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. நான் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தபோது, தற்போதைய பா.ஜ., - எம்.பி., யதுவீரை, சுற்றுலா துறை துாதராக நியமித்தேன். அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை. சமூகத்திற்கு மன்னர் குடும்பம் செய்த பங்களிப்புக்காக அவரை நியமித்தேன்.மைசூரு சாண்டல் சோப்புக்கு, நடிகை தமன்னாவை ஏன் துாதராக நியமித்தார் என்று தெரியவில்லை. அனைவரும் நடிகையை மாற்றும்படி வற்புறுத்தி வருகின்றனர். கல்பனா சாவ்லா போன்று சாதனை புரிந்த பல பெண்கள் உள்ளனர். அவர்களை போன்றவர்களை நியமிக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.