உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பரவசப்படுத்தும் தங்கமலை திரு சுப்பிரமணிய சுவாமி கோவில்

பரவசப்படுத்தும் தங்கமலை திரு சுப்பிரமணிய சுவாமி கோவில்

பெ ங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் பிரசித்தி பெற்ற தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இங்குள்ள மலையில் பல ஆண்டுகளுக்கு முன், துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பூஜித்து வந்த வேலை, இந்த மலையில் நிறுவி, அனைவரையும் வழிபட வைத்தார். காலப்போக்கில் வேல் அருகில் முருகன் மற்றும் துறவி சிலைகளை இப்பகுதி மக்கள் பிரதிஷ்டை செய்தனர். குமரகுருபரர் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறவிலேயே வாய் பேச முடியாத குமரகுருபரரை அருட்சக்தியினால் பேச வைத்து பக்தராக்கினார் முருகப்பெருமான். அதுபோன்று, இப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரின், 9 வயது வரை பேசாமல் இருந்த குழந்தையை, ஆடி கிருத்திகை அன்று பேச வைத்தார் தங்கமலை முருகப்பெருமான். இதுபோல இவரை வணங்கி சென்ற பின், அரசியலில் அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள், பெரிய அளவில் வளர்ந்துள்ளனர். முருகப்பெருமானிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தயக்கமின்றி சொல்வதற்காகவே, வள்ளி, தெய்வானையை சற்று தள்ளியே பிரதிஷ்டை செய்துள்ளனர். மனைவியுடன் நவகிரஹங்கள் உள்ள சன்னிதியும் இங்குள்ளது. தத்துவங்களில் ஒன்றான சைவ சித்தாந்தம் சொல்வது போன்று, 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோவிலில் 84 படிகளை அமைத்து உள்ளனர். படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சியும், அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகனுடைய சிற்பங்களும் உள்ளன. முருகனை தரிசிப்போர் வாழ்வில் பணமும், புகழும் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாக்கள் வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆடி மாதத்தில் கடைசி வெள்ளி கிழமையில் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பக்தைகள் பங்கேற்பர். நவம்பர் மாதம், முருகப்பெருமானின் வேலுக்கு வேல் பூஜை செய்து, ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகிறது. ஒருமுறையேனும் தங்கமலை முருகப்பெருமானை தரிசித்தால் தங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ