உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தீய சக்திகளை விரட்டும் மாகாளி

தீய சக்திகளை விரட்டும் மாகாளி

– நமது நிருபர் – பெங்களூரு என்றால் வானுயர்ந்த கட்டடங்கள், ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு புராதன கோவில்களும் ஏராளம். இவற்றில் பண்டே மாகாளி கோவிலும் ஒன்றாகும். இது ஆதி சக்தியான அம்பாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். பெங்களூரு, கெம்பேகவுடா நகரின், கவிபுரம் குட்டஹள்ளி அருகில், கெம்பாம்புதி ஏரிக்கரையில் பண்டே மாகாளி குடி கொண்டு அருள்பாலிக்கிறார். பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்பே கவுடா காலத்துக்கு முந்தைய காலத்திலேயே, இக்கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. 600 ஆண்டுகள் பழமையான கோவில் என, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காவல் கோபுரத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

சாந்த சொரூபிணி

பல காலத்துக்கு முன், இப்பகுதியில் நஞ்சம்மா என்ற பெண் வாழ்ந்தார். அவருக்கு காளிதேவி அருள்பாலித்தார். நஞ்சம்மாவின் பக்திக்கு இணங்கி, இங்கு காளி தேவி நிலைத்து நின்றதாக நம்பப்படுகிறது. பொதுவாக காளிதேவி என்றாலே, உக்ரமான தோற்றத்தில் மிரட்டுவார். ஆனால் பண்டே மாகாளி சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கிறார். பண்டே என்றால் கன்னட மொழியில், பாறை என அர்த்தமாகும். மலைப்பாங்கான பகுதியில், ஒரு பெரிய பாறையில் காளியின் வடிவம், இயற்கையாகவே உருவானதால் கோவிலுக்கு இந்த பெயர் ஏற்பட்டது. பண் டே மாகாளியை தரிசனம் செய்து வழிபட்டால், தீய சக்திகள் விலகும். தொழில், கல்வி, குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அகலும். மனதில் தைரியம் ஏற்படும் என்பது ஐதீகம். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை