உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பதவி நிரந்தரம் அல்ல: ராஜண்ணா தத்துவம்

பதவி நிரந்தரம் அல்ல: ராஜண்ணா தத்துவம்

துமகூரு: ''பதவிகள் நிரந்தரமானவை அல்ல. அமைச்சர் பதவி பறிபோனதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் என்னை அமைச்சரவையில் இருந்து நீக்க சதி நடந்துள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார். துமகூரு மதுகிரியில் நேற்று அவர் அளித்த பேட்டி: என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது, முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியாது. மூன்று பேர் சேர்ந்து, டில்லியில் எனக்கு எதிராக சதி செய்தனர். என்னை பதவியில் தக்கவைத்துக் கொள்ள, சித்தராமையா அதிகபட்சம் முயற்சித்தார்; ஆனால் முடியவில்லை. விதான்சவுதாவில் இருந்தபோது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், முதல்வர் சித்தராமையாவுக்கு போன் செய்தார். ராகுல் என்ன காரணத்துக்காக போன் செய்தார் என்பது, எனக்கு தெரியவில்லை. மேலிடம் உத்தரவிட்டதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, என் மீதுள்ள அன்பு, நம்பிக்கையால் என்னை பா.ஜ.,வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கலாம். அவர் அழைத்தார் என்பதால், நான் பா.ஜ.,வுக்கு செல்ல முடியுமா? காங்கிரஸ் எனக்கு என்ன குறை வைத்துவிட்டது? விரைவில் நான் டில்லி செல்ல உள்ளேன். அங்கிருந்து திரும்பிய பின், நல்ல செய்தியை கொடுக்கிறேன். அமைச்சர் பதவியில் இருக்கும்போது, எப்படி இருந்தேனோ அதே போன்று இப்போது பத்து மடங்கு அதிக சக்தியுடன் இருக்கிறேன். முதல்வர் சித்தராமையா மீது, யாரும் கோபம் அடையக்கூடாது. அமைச்சர் பதவி பறிபோனதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. தேவராஜ் அர்சுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. ஹாசனில் சூட்டும், கோட்டும் அணிந்து டை கட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இப்போது மீண்டும் உங்களுடன் சாதாரண நபராக நிற்கிறேன். பதவியில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவன் நான் அல்ல. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை