உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இரண்டாம் கட்ட யானைகள் மைசூருக்கு உற்சாக வருகை

இரண்டாம் கட்ட யானைகள் மைசூருக்கு உற்சாக வருகை

மைசூரு: மைசூரு தசராவில் பங்கேற்க இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள் நேற்று அரண்மனை வந்தன. மைசூரு தசரா விழா செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, மாநிலத்தின் பல யானைகள் முகாம்களில் இருந்து, முதல் கட்டமாக, 'அபிமன்யு' என்ற யானை தலைமையில் ஒன்பது யானைகள் மைசூரு வந்தன. இரண்டாம் கட்டமாக மத்திகோடு யானைகள் முகாமில் இருந்து ஸ்ரீகண்டா, 56; துபாரே யானைகள் முகாமில் இருந்து கோபி, 43, சுக்ரீவா, 43, ஹேமாவதி, 11; பீமனகட்டே யானைகள் முகாமில் இருந்து ரூபா, 44, ஆகிய ஐந்து யானைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த யானைகள் நேற்று மாலையில், மைசூரு அரண்மனைக்கு வந்தடைந்தன. கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் வனத்துறை அதிகாரிகள், போலீசார் மலர்கள் துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அரண்மனை மைதானத்தில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பூஜை முடிந்தவுடன், அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் வரை 14 யானைகளும் நடைபயிற்சி மேற்கொள்கின்றன. அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்ததும் முதல் கட்ட யானைகளை பார்த்த, சுக்ரீவா என்ற யானை, தனது தும்பிக்கை துாக்கியபடி உற்சாகத்துடன் நடந்து சென்றது. திடீரென யானை தும்பிக்கையை துாக்கியபடி வேகமாக நடந்து சென்றதால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. யானைகளுடன், ஐந்து பாகன்கள், உதவியாளர்கள், அவர்களின் குடும்பத்தினரும் வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !