உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒளிர போகுது தங்கவயல் ஜிம்கானா மைதானம்!

ஒளிர போகுது தங்கவயல் ஜிம்கானா மைதானம்!

- நமது நிருபர் - தங்கவயலில் நுாற்றாண்டு பழமையான ஜிம்கானா மைதானம் மீண்டும் புத்துயிர் பெற உள்ளது. தங்கச் சுரங்கம் துவங்கிய காலத்தில் இங்கிலாந்து, ஜெர்மன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கவயலுக்கு வந்திருந்தனர். அவர்களின் பொழுது போக்கு, விளையாட்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. அப்போது உருவானது தான், சர்வதேச தரத்துக்கு நிகரான ஜிம்கானா கால் பந்தாட்ட மைதானம். இது, தங்கவயலின் உரிகம் பகுதியில், 1902ல், 10 ஏக்கர் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் விளையாடும் இந்த கால் பந்தாட்ட மைதானத்தை உருவாக்க, 5 அடி ஆழம் வெட்டி எடுத்து, அதில் அடுக்கு அடுக்காக அடுப்புக்கரி, மணல், மரத்துாள், செங்கற்கள், மீண்டும் மணல் மற்றும் செம்மண் நிரப்பி, சமமாக பரப்பி மைதானம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு எத்தகைய கனமழை பெய்தாலும், சில நொடிகளில் சொட்டு நீரைக் கூட இப்பகுதியில் காண முடியாது. மழை வெள்ளத்தை உறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்த மைதானமாக தயார் செய்தனர். இங்கு தங்கச்சுரங்க ஆங்கிலேய அதிகாரிகள் பூட்ஸ் காலுடன் விளையாடினாலும், தங்கச் சுரங்க தொழிலாளர்கள் வெறுங்காலால் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடி, அசத்திய அந்த கால வரலாறு தேசிய அளவில் சாதனையை படைத்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, தங்கச் சுரங்கம் இங்கிலாந்து நாட்டினரின் பிடியில் தான் இருந்தது. 1956ல் தங்கச் சுரங்கம் தேசியமயமாக்கப்பட்ட பிறகு தங்கவயலை சேர்ந்த விளையாட்டு வீரர்களே சர்வதேச அளவில் விளையாட தகுதிப்பெற்றனர். கடந்த, 1972ல் தங்கச் சுரங்கம் பொதுத்துறை நிறுவனமாக தரம் உயர்த்திய போது, ஜிம்கானா விளையாட்டு மைதானத்தை ஸ்டேடியம் ஆக்கினர். இங்கு, 1976ல் அகில இந்திய கால் பந்து போட்டியை நடத்தினர். விளையாட்டை ரசிக்க நுழைவு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. 1980ல் தங்கச் சுரங்க நுாற்றாண்டு விழா இதே மைதானத்தில் நடந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி விழாவில் பங்கேற்றார். இந்திய சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின் போலீசார், தேசிய மாணவர் படை, சாரணர், பாண்டியர் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் இங்கு தான் நடத்தி வந்தனர். கடந்த, 2001 மார்ச் 1ல் தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. ஒர்க் ஷாப்புகள் பெமல் தொழிற்சாலையிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது ஜிம்கானா மைதானம் சுற்றி வேலி அமைக்க, நுழைவாயிலுக்கு பூட்டு போட்டனர். இதனால் நடமாட்டமே இல்லாமல் போனது. மைதானத்தில் செடி, கொடிகள், மரங்கள், முட்புதர்கள் வளர்ந்து காடாக மாறியது. ஜிம்கானா மைதானத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் முழுமையாக நின்று போயின. இளைஞர்களின் விளையாட்டு ஆர்வமும் மெல்ல குறைந்து போயின. தீய வழிக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனவே, மீண்டும் தங்கவயலில் ஜிம்கானா மைதானம் திறக்க வேண்டும்; அதை புனரமைக்க வேண்டும் என்று சமூக அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கச் சுரங்கத்தின் ஜிம்கானா மைதானத்தை சீரமைப்பு செய்ய தங்கச் சுரங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கோலார் மாவட்ட எம்.பி., மல்லேஸ் பாபு ஆர்வம் காட்டியதன் விளைவால், மத்திய அரசின் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதை மேம்படுத்த அனைத்து வகையிலும் உதவுவதாக உறுதி அளித்துள்ளனர். அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜிம்கானா மைதானத்திற்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. மீண்டும் எப்போது விளையாட்டு மைதானம் திறக்கப் படுமோ என்ற இளைஞர் களின் கனவு நெனவாகிறது! ஜிம்கானா மைதானம் உருவாக்கிய வீரரான தங்கவயலின் அகில இந்திய கால்பந்து வீரர் முருகேஷ், கொல்கட்டா நகரில் கண்ணாடி அறையில் காட்சி பொருளாக வைத்து பெருமைப்படுத்தப்பட்டார். 1936 - -56 வரையில் 30 ஆண்டுகள் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர்களாக விளங்கினர் கோல்கீப்பர் கதிர்வேல் செட்டியார், ஆரோக்கியராஜ், சம்ராபதி, மூர்த்தி, வேலு, லக்கப்பா, பரசுராமன் ராமானுஜம். புகழ்பெற்ற கால்பந்தாட்ட குழுக்கள்: கொக்கோ ராஜியின் கமலா நேரு டீம், நடேசன், கே.ஜி.எப்., ஜிம்கானா டீம் ஆரோக்கியராஜ், ஜார்ஜ், தங்கராஜ், ஜெயராம், வாண்டரர்ஸ் டீம் புஷ்பம், வேலு, தங்கவேலு, நேஷனல் கிளப் டீம் கணேஷ், ஜனாப் அப்துல் கான், லுார்து, இயேசு, வடிவேலு, யூத் கிளப் எட்வர்ட், கெங்கராஜ், புஷ்பராஜ். உரிகம் கனகராஜ், பரமேஷ், முருகேஷ், நடேசன், கல்பொடியான் பெருமாள் புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் சீனிவாசன். எம்.எச்.ஆர். ராவ் ஆகியோர் ஜிம்கானா மைதானத்தில் விளையாடி தேசிய அளவில் புகழ் பெற்றனர். சர்வதேச வீரர்கள் டி.நடராஜ் - 1963 முதல் ,1989 வரையில் கால் பந்தாட்ட சாதனையாளர். இவர், 1970, 1971, 1973ல் கோலாலம்பூர், 1970 பாங்காக், 1971ல் சிங்கப்பூர், ரஷ்யா, 1972ல் ரங்கூன், 1974ல் தெஹ்ரான் ஆகிய நாடுகளில் நடந்த கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். பெங்களூரு ஹெச்.ஏ.எல்., தங்கவயல் பெமல் கால் பந்தாட்டக்குழு பயிற்சியாளராகி, தேசிய அளவில் புகழை எட்டியவர். இவர்களை எல்லாம் உருவாக்கியது இந்த ஜிம்கானா மைதானம் தான். ஆங்கிலேயர் கால்பந்தாட்ட வீரர்களாக புகழ்பெற்றவர்கள் ஜே.டபிள்யூ.ஹூப்பர், கிப்ட்ஸ், ஆர்.எச்.ஸ்டெப்பில்டன், ஆர்.ஜி.மெக்காஸ், கென்னத் பவுல், வெஸ்லி பூஸி, வில்லியம்ஸ், டாக்டர் டங்கர்லி, ஹட்சன், ஜார்விஸ், பெர்னாண்டஸ், ஹோஸ்கின். எம்.ஜி.ஆர்., - சிவாஜி இதே ஜிம்கானா மைதானத்தில் தான், 1972ல் சமுதாய மக்களுக்காக திருமண மண்டபம் கட்டுவதற்கு நன்கொடை வசூலுக்கு, 'வண்டிக்காரன் மகன்' என்ற நாடகம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர்., பங்கேற்றார். ஏராளமானோர் எம்.ஜி.ஆரை பார்க்க குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப் பட்டது. எம்.ஜி.ஆர்., தங்கவயலுக்கு வந்து சென்ற ஒரே வாரத்தில்அ.தி.மு.க.,வை அவர் நிறுவினார். செயின்ட் செபாஸ்டியன் பள்ளி கட்டட நிதிக்காக, 1971ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தகலை நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசன், இதே ஜிம்கானா மைதானத்தில் பங்கேற்றார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக் குழுவின் இன்னிசைக் கச்சேரி, குன்னக்குடி வைத்தியநாதனின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியும் கூட இதே மைதானத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை