வீடுகளில் திருடியவர் கைது
தங்கவயல்: பல இடங்களில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த 10.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 72 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பேத்தமங்களா அருகே சித்தாரெட்டிப் பள்ளி கிராமத்தின் நாராயணசாமி என்பவர், தன் வீட்டில் 40 கிராம் தங்க நகைகள், பணம் திருட்டு போனதாக பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பேத்தமங்களா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் தலைமையில், எஸ்.ஐ., சங்கமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில், ஆண்டர்சன்பேட்டையின் கிரண்.ஆர். என்ற பப்லு, 29, என்பவரை கைது செய்தனர். சித்தாரெட்டிப்பள்ளி கிராமத்தில் ஒரு வீட்டில் திருடியதையும், சங்கனஹள்ளி கிராமத்தின் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதையும், ராபர்ட்சன்பேட்டை சுவர்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்க நகைகள் திருடியதையும் கிரண் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து, 10.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 72 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.