கணவரின் மோசடிகளை அம்பலப்படுத்திய மனைவி
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அலுவலக அதிகாரி என, நம்ப வைத்து பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்த கணவரின் மோசடியை, மனைவியே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெங்களூரு, இந்திரா நகரின், பி.எம்.காவலில் வசித்தவர் நாராயண், 45. இவரது மனைவி அன்னபூர்ணா, 40. கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்வதாக பலரிடம் நாராயண் கூறிக்கொண்டார். காங்., தலைவர்கள் சிலருக்கு நெருக்கமானவர் என, நம்ப வைத்திருந்தார். தேவையான வசதிகளை செய்து தருவதாக ஆசை காட்டி, பல பெண்களுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார். அதை தன் மொபைல் போனிலும் பதிவு செய்து வைத்திருந்தார். கணவரின் நடத்தையை சந்தேகித்த அன்னபூர்ணா, கணவரை உன்னிப்பாக கண்காணித்தபோது, அவருக்கு பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டுபிடித்தார். கணவருக்கு தெரியாமல், அவரது மொபைல் போனை பார்த்தபோது, பெண்களுடன் நெருக்கமாக உள்ள ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கணவரிடம் கேள்வி கேட்டதால், நாராயண் மனைவியை வீட்டில் இருந்து விரட்டிவிட்டார். மனம் வருந்திய அன்னபூர்ணா, கிழக்கு மண்டல மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி நாராயண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஒரு பெண்ணுடன், நாராயண் நெருக்கமாக இருக்கும் வீடியோவும், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.