| ADDED : நவ 27, 2025 07:34 AM
ஞானபாரதி: பெங்களூரு ஞானபாரதி பகுதி யை சேர்ந்த இளம்பெண், 'நீட்' தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இவருக்கு, 'இன்ஸ்டாகிராமில்' கடந்த சில மாதங்களுக்கு முன் சித்தார்த் வீர் என்பவர் மெசேஜ் அனுப்பினார். அவர் தன்னை தொழிலதிபர் என அறிமுகப்படுத்தி கொண்டார். இருவரும் பேசி பழகி வந்தனர். மெடிக்கல் சீட் வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் பெண்ணிடம் சித்தார்த் கூறினார். இதை நம்பிய அப்பெண்ணும், அவரை காதலிக்க துவங்கினார். அடிக்கடி பெண்ணின் வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவரது பெற்றோரும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். மேலும், சித்தார்த் புதிய தொழில் தொடங்குவதற்கு, 8 லட்சம் ரூபாய் கொடுத்தனர். சமீபத்தில் வீட்டுக்கு வந்த அவருக்கு டீ போடுவதற்கு அப்பெண் சமையலறைக்கு சென்றார். அச்சமயத்தில், வீட்டில் இருந்த அரை கிலோ தங்க நகைகளை திருடி சென்று விட்டார். சில நாட்கள் கழித்து, உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்த நகைகளை அப்பெண்ணின் அம்மா எடுக்க சென்றார். அப்போது, நகைகள் திருடு போனது தெரிந்தது.ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகைகளை திருடியது சித்தார்த் என தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.