உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பால் பவனுக்கு வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்

பால் பவனுக்கு வந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்

பெங்களூரு: பால் பவன் மூடப்பட்டிருப்பதை மக்களிடம் கூறாமல் வாகனங்களுக்கான பார்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இறுதியில், பால் பவனிற்குள் செல்ல முடியாமல் குழந்தைகளுடன் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். பெங்களூரு மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய சுற்றுலா தலம் கப்பன் பார்க். இந்த கப்பன் பார்க்கிற்குள் பால் பவன் எனும் சிறுவர்களுக்கான பூங்காவும் உள்ளது. இவை, இரண்டிலும் பல ஆண்டுகளாக உள்ள ராட்சத மரங்கள் உள்ளன. இதில் உள்ள சில மரங்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாய்ந்தன. இதனால், கடந்த நான்கு நாட்களாக பால் பவன் மூடப்பட்டது. மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமாக வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதே போல, நேற்று பூங்காவிற்கு வந்தவரின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர்களிடம் பால் பவன் மூடப்பட்டு உள்ளது பற்றி, பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் ஊழியர்கள் எதுவும் கூறவில்லை. இது எதையும் அறியாத தங்கள் குழந்தைகளுடன் வந்தவர்கள், பார்க்கிங் டோக்கனை வாங்கிவிட்டு, பால் பவனுக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது, பூங்கா மூடப்பட்டு உள்ளதாக நுழைவு வாயில் கதவில் அறிவிப்பு பலகை இருந்தது. இதை பார்த்தோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரத்தில், பார்க்கிங் கட்டணம் வசூலித்த ஊழியர்களிடம், ' பால் பவன் மூடப்பட்டதை ஏன் முன்கூட்டியே கூறவில்லை' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, பார்க்கிங் ஊழியர்கள் மழுப்பலாக பதில் அளித்தனர். இருப்பினும், பார்க்கிங் கட்டணம் திருப்பி தரப்படவில்லை.இதனால், ஆசையாக தங்கள் குழந்தைகளுடன் வந்த பலரும், ஏமாற்றத்துடன் தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை