நெடுஞ்சாலையில் வேலை செய்த மூவர் லாரி மோதி பலி; 6 பேர் காயம்
பெலகாவி: நெடுஞ்சாலையில் பராமரிப்பில் ஈடுபட்டிருந்தோர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.பெலகாவி, கிட்டூர் தாலுகா இட்டாகி கிராசில் உள்ள தேசிய நெடுஞ்சாலை - 4ல், புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலையில், சாலை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த எண்ணெய் டேங்கர் லாரி, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதி விட்டு, அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மூவர் பலி
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், வாகன ஓட்டிகளின் உதவியுடன், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரிந்தது. பலத்த காயம் அடைந்த ஆறு பேரையும், லாரி ஓட்டுநரையும் மீட்டு, பெலகாவியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். கண் முன்னே
இதையடுத்து, கிட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர்கள் கலபுரகி மாவட்டம், சிஞ்சோலி தாலுகா, ஷிரோலி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா ஜாதவ், 45. இவரது மகன் மகேஷ் ராமச்சந்திரா ஜாதவ், 18, ராமண்ணா என்ற ரமேஷ், 38, ஆகியோர் என்பது தெரிய வந்தது.இதில், உயிரிழந்த ராமச்சந்திரா ஜாதவ்வின் மனைவி இரண்டு கால்கள் துண்டானது. அவர் தன் கணவர் இறந்ததை கண் முன்னே பார்த்து உள்ளார். தற்போது, ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, விபத்தில் இறந்த ராமச்சந்திராவின் மனைவி லட்சுமிபாயின் கண் முன்னே கணவரும், மகனும் இறந்த சோகம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினார். லாரியை ஓட்டி வந்த தினேஷ் ஷெட்டிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.