உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேற்கு வங்க பெண்ணை தாக்கிய மூன்று போலீசார் சஸ்பெண்ட்

மேற்கு வங்க பெண்ணை தாக்கிய மூன்று போலீசார் சஸ்பெண்ட்

வர்துார்: பெங்களூரு, வர்துாரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரியங்கா. இவரது வீட்டில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுந்தரி பீபி, 34, வேலை செய்தார். சில தினங்களுக்கு முன் வீட்டை சுத்தம் செய்தபோது, கட்டிலுக்கு அடியில் கிடந்த 100 ரூபாயை எடுத்து பிரியங்காவிடம், சுந்தரி கொடுத்தார். இந்நிலையில், தன் வீட்டில் வைர மோதிரம் காணாமல் போனதாக வர்துார் போலீசில் புகார் செய்த பிரியங்கா, சுந்தரி மீது சந்தேகம் தெரிவித்தார். இதனால் சுந்தரியை விசாரணைக்காக, போலீசார் அழைத்துச் சென்றனர். மோதிரத்தை திருடவில்லை என்று சுந்தரி கூறியபோதும், விசாரணை என்ற பெயரில் போலீஸ்காரர்கள் சஞ்சய் ரத்தோட், சந்தோஷ், அர்ச்சனா ஆகியோர், சுந்தரியை தாக்கி உள்ளனர். குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் அடித்தனர். சமூக ஆர்வலர் ஒருவர், போலீஸ் நிலையம் சென்று சுந்தரியை மீட்டு வந்தார். இதுபற்றி அறிந்த மேற்கு வங்க எம்.பி., சமீருல் இஸ்லாம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவுவதாக அறிவித்தார். சுந்தரியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கர்நாடக மகளிர் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒயிட்பீல்டு டி.சி.பி., பரசுராம் நடத்திய விசாரணையில் சுந்தரி தாக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, மூன்று போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து பரசுராம் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை