உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தோஷத்தை போக்க நெய் விளக்கேற்றி நாக கன்னிகைக்கு பூஜை

தோஷத்தை போக்க நெய் விளக்கேற்றி நாக கன்னிகைக்கு பூஜை

கொப்பால் மாவட்டத்தில் பக்தர்களை ஈர்க்கும் பல கோவில்கள் உள்ளன. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட கோவில்கள் இங்குள்ளன. அன்றைய மஹாராஜாக்களின் பக்தி, கலை ஆர்வத்துக்கு சாட்சியாக உள்ளன. இவற்றில் நாக கன்னிகை கோவிலும் ஒன்றாகும். கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின் கோவர்தி கிராமத்தில் நாக கன்னிகை கோவில் அமைந்துள்ளது. இது 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இயற்கை சூழ்ந்த, அடர்ந்த வனப்பகுதியில் கோவில் அமைந்திருந்தாலும், பக்தர்கள் வருகின்றனர். இது மிகவும் அபூர்வமான கோவிலாகும். இத்தகைய கோவிலை கர்நாடகாவில் எங்கும் காண முடியாது. பொதுவாக பல கோவில்களிலும் நாகர் உருவங்கள் செதுக்கப்பட்ட கற்கள், விக்ரகங்கள் உள்ளன. ஆனால் நாக கன்னிகைக்கு தனி கோவில் இருப்பது மிகவும் அபூர்வமாகும். இங்கு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இக்கோவிலை கல்யாண சாளுக்கிய வம்சத்து மஹாராணி பத்மாவதி கட்டியதாக விவரிக்கப்பட்டுள்ளது. நாக கன்னிகை கோவிலுடன், மற்றொரு கோவிலும் இங்கிருந்தது. ஆனால் அது மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது. கோவர்தி கிராமத்தில் ராமலிங்க சுவாமி கோவில் உட்பட பல கோவில்கள் உள்ளன. இவைகள் சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டதாம். ஒவ்வொன்றும், தனித்தனி மகத்துவம் பெற்றுள்ளது. நாக கன்னிகை மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நாக கன்னிகையை தரிசனம் செய்து, வேண்டுதல் வைத்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இந்த காரணத்தால் நாக தோஷம் உள்ளவர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை, குறிப்பாக பெண்கள் அதிகம் வருவர். நெய் விளக்கேற்றி பூஜை செய்வர். கோவில் அருகில் தீர்த்த குளமும் உள்ளது. குளம் சரியான பராமரிப்பு இல்லாமல், சீர் குலைந்துள்ளது. இதை சரி செய்யும்படி, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை