உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கப்பன் பூங்காவில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்

கப்பன் பூங்காவில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்

பெங்களூரு: கப்பன் பூங்காவில் நாளை மலர் கண்காட்சி துவங்கி, டிசம்பர் 7 வரை நடக்கிறது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் குஸ்மா கூறியதாவது: பெங்களூரின் கப்பன் பூங்காவில், நவம்பர் 25 முதல், டிசம்பர் 7ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கவுள்ளது. கன்னட ராஜ்யோத்சவா மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இந்த மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். கப்பன் பூங்காவின் பால பவனில் இருந்து, ஜெய சாமராஜேந்திர உடையார் சதுக்கம் வரை, பூக்களால் உருவாக்கப்பட்ட கலை வடிவங்கள், மக்களை மகிழ்விக்கும். மலர் கண்காட்சிக்காக, ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வண்ண மயமான பூக்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றை வரிசையாக அடுக்கி வைக்கும் பணிகள் நடக்கின்றன. சாதாரண நாட்களில் நுழைவு கட்டணம் 50 ரூபாய், விடுமுறை நாட்களில், 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பள்ளி சிறார்களுக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !