உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய இருவர் கைது
பெங்களூரு: உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். 'சொமேட்டோ'வில் உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்பவர் சந்த். கடந்த 14ம் தேதி பிரியாணி டெலிவரி கொடுக்க, பாபுஜி நகருக்கு சென்றார். அன்று மழை பெய்து கொண்டிருந்ததால், ஆர்டர் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து, உணவு டெலிவரி செய்ய தாமதமானது. உணவு ஆர்டர் கொடுத்த முபாரக் என்பவர், உணவு தாமதமானதால் ஆத்திரமடைந்திருந்தார். அப்போது உணவு எடுத்து வந்த சந்த்தை, தன் நண்பர் ஷாருக்குடன் இணைந்து தாக்கினார். இருவரும் சேர்ந்து பெரிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவால் நடுரோட்டில் வைத்து தாக்கினர். இதை அப்பகுதியில் இருக்கும் யாரோ ஒரு நபர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. காயமடைந்த உணவு டெலிவரி ஊழியர் சந்த், பேட்ராயணபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முபாராக், ஷாருக் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.