பாதி விலையில் பொருள் தருவதாக மோசடி செய்த இருவர் ஓட்டம்
உத்தரகன்னடா: பாதி விலைக்கு வீட்டு உபயோக பொருட்களை விற்பதாக ஆசை காட்டி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து தப்பிய, தமிழகத்தின் இருவரை போலீசார் தேடுகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உதயகுமார் மற்றும் ரங்கராஜ். இரண்டு மாதங்களுக்கு முன், இவர்கள் உத்தரகன்னடா மாவட்டம், பட்கல் மார்க்கெட்டில் கட்டடத்தை வாடகைக்கு எடுத்தனர். இங்கு 'குளோபல் எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில், வீட்டு உபயோக பொருட்கள் கடையை திறந்தனர். தங்களின் கடையில், வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷன், பிரிஜ், மேஜை, நாற்காலிகள் உட்பட, மற்ற பொருட்கள் பாதி விலையில் விற்கப்படும் என, விளம்பரம் செய்தனர். முன்கூட்டியே பணம் செலுத்தினால், 10 நாட்களில் பொருட்கள் வீடு தேடி வரும் என அறிவித்தனர். முதல் மூன்று வாரம், சொன்னபடியே பொருட்களை பாதி விலைக்கு கொடுத்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள், தேவையான பொருட்களுக்கு பணம் கட்டினர். 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலானதும், பொருட்களை தராமல் இரவோடு இரவாக இருவரும் தப்பினர். கடைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பட்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன், குளோபல் எண்டர்பிரைசஸ் கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மக்கள், கைக்கு கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்றனர். போலீசாரும் உதயகுமாரையும், ரங்கராஜையும் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.