இளநீர் பறிக்க சென்ற இருவர் மின் வேலியில் சிக்கி பலி
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், கொத்தலவாடி அருகில் உள்ள சசுவேலஹள்ளாவில் பிரகாஷ் என்பவருக்கு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு அளித்திருந்தார். அவரும், இந்நிலத்தில் தென்னைமரம், மக்காச்சோளம் உட்பட பல பயிர்களை பயிரிட்டிருந்தார். இதை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, உரிமையாளருக்கு கூட தெரியாமல், சட்ட விரோதமாக, மின்வேலி அமைத்துள்ளார். இதே கிராமத்தை சேர்ந்த சுவாமி, 52, கிருஷ்ண ஷெட்டி, 50, ஆகிய இருவர், நேறறு முன்தினம் இரவு இளநீர் பறிக்க விவசாய நிலத்துக்கு சென்றனர். இருட்டில் மின்வேலி இருப்பது தெரியாமல், இருவரும் நிலத்துக்குள் நுழைந்தபோது மின்சாரம் பாய்ந்து பலியாகினர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கும், நிலத்தின் உரிமையாளர் பிரகாஷுக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், அவரிடம் விசாரித்தபோது, கேரள நபருக்கு குத்தகைக்கு விட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட கேரள நபர், தலைமறைவாகி விட்டார். வழக்குப் பதிவு செய்த சாம்ராஜ் நகர் கிராம போலீசார், அவரை தேடி வருகின்றனர்.