| ADDED : டிச 02, 2025 04:25 AM
தார்வாட்: அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி, தார்வாட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய வேலையில்லா பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, தார்வாட் மாவட்டம் ஸ்ரீநகர் வட்டத்தில், நேற்று நுாற்றுக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நல அமைப்பினரும் அங்கு குவிந்திருந்தனர். இதையறிந்த மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனாலும், போலீசாரின் பேச்சை கேட்காமல், ஸ்ரீநகர் வட்டத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 'சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் குறித்த தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என்றனர். இதனால், பெண்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். தார்வாட் போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறியதாவது: அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டது. பேரணியாக சென்றிருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கும். அதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பர். போராட்டத்தில் எத்த னை பேர் பங்கேற்பர் என்பது குறித்து சரியான தகவல் தெரிவிக்கவில்லை. 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அவர்களில், 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. சட்டத்தின்படி, அனுமதி வாங்கிய பின் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.