அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கவனத்துக்கு கொண்டு சென்றார். கர்நாடக அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் சங்கங்களின் வரலட்சுமி, சுனந்தா, மாலினி மேஸ்தா உட்பட பலர் டில்லிக்கு சென்று, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்து, தங்களின் பிரச்னைகள் குறித்து விவரித்தனர். அவரும், அங்கன்வாடி ஊழியர்களுடன், மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவியை, நேற்று சந்தித்தார். அவரிடம் ஊழியர்கள் சார்பில், பிரச்னைகள், கோரிக்கைகளை விவரித்தார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு, தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இன்சூரன்ஸ் வசதி, ஊழியர்களின் ஊதிய உயர்வு உட்பட பல வேண்டுகோள்களை தெரிவித்தார். பின், மத்திய அமைச்சர் அன்னபூர்ணா பேசியதாவது: அங்கன்வாடி ஊழியர்களை, தேர்தல் பணிகளுக்கு நியமிக்க கூடாது என்பது குறித்து, தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்துவேன். மகளிர், குழந்தைகள் நலத்துறைக்கு உட்பட்ட அனைத்து வேண்டுகோள்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மனித நேய அடிப்படையில், உங்களின் வேண்டுகோள்களை பரிசீலிப்பேன். நரேந்திர மோடி அரசு, உங்களுடன் உள்ளது. கர்நாடகாவில் நீங்கள் நடத்தும் போராட்டம் குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி, என்னிடம் விவரித்துள்ளார். விரைவில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். இவ்வாறு அவர் பேசினார். இதே நேரத்தில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய குமாரசாமி, ஊழியர்கள் சங்க தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதன்பின் அவரது இல்லத்துக்கு, அதிகாரிகளை அனுப்பி வைத்தார். குமாரசாமி கூறியதாவது: என் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை நிறுத்திவிட்டு, டில்லிக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நல்லபடி முடிந்தது. இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -