பிக்பாக்கெட் செய்யும் அரசு மத்திய அமைச்சர் விளாசல்
பெங்களூரு: ''மக்களுக்கு சேவை என்ற பெயரில் மாநில அரசு, சாமானிய மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஒரு பிக்பாக்கெட் தந்திரமே தவிர, வேறு எதுவுமில்லை,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கெம்பே கவுடாவால் உருவாக்கப்பட்ட பெங்களூரு நகரின் பரப்பளவை விரிவுபடுத்துவதில், இந்த அரசுக்கு அக்கறை இல்லை. அதற்கு மாறாக, ஊழல், மிரட்டி பணம் பறிப்பதற்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. புதிய மென்பொருள் அறிமுகம் செய்வதாக கூறி, மக்கள் பணத்தை காங்கிரஸ் அரசு கொள்ளை அடிக்கிறது. பல்வேறு பணிகளுக்காக, 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 'உங்கள் சொத்து, உங்கள் உரிமை' மற்றும் 'உங்கள் வீட்டு வாசலிலேயே ஆவணங்களை வழங்குவோம்' என்பவை அனைத்தும் பொய் பிரசாரமே. இது, சாமானிய மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஒரு பிக்பாக்கெட் தந்திரமே தவிர, வேறு எதுவுமில்லை. டில்லி தலைவர்களுக்கு பணம் அனுப்புவதற்காக, கர்நாடக காங்கிரசை ஏ.டி.எம்., ஆக மாற்றி விட்டது. அரசு பொய் சொல்வதில் எந்தவித தயக்கமும் காட்டாமல், வெட்கமே இல்லாமல் மக்களின் பணத்தை பறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.