பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பெங்களூரு : வீட்டு பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், கடந்தாண்டு ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டும், அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, விசாரணை நீதிமன்றத்தில் அணுக உத்தரவிட்டது. பின், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக முறையிட்டார். இம்மாதம் 25ம் தேதி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், 36 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. இன்று அறிவிக்கும் தீர்ப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவின் அரசியல் வாழ்க்கையும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் குடும்ப கவுரமும் அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.