உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய டைரி சிக்கியது!:லஞ்ச விவகாரங்களை புட்டு புட்டு வைத்துள்ள பா.ஜ., பிரமுகர்

கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய டைரி சிக்கியது!:லஞ்ச விவகாரங்களை புட்டு புட்டு வைத்துள்ள பா.ஜ., பிரமுகர்

கர்நாடக அரசின் கால்நடைக்கு துறையில் காலியாக இருந்த, 400 கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, நடப்பாண்டின் ஜனவரி 9, 10ம் தேதிகளில் தேர்வு நடந்தது. கடந்த ஜூலை மாதம் முடிவுகள் வெளியான போது, தேர்வில் முறைகேடு நடந்தது தெரிந்தது. ஏராளமான தேர்வர்களிடம் 40 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் வாங்கி கொண்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்கி மாதிரி தேர்வு நடத்தியதும், பாதுகாப்பு அறையில் இருந்த ஓ.எம்.ஆர்., சீட்டில் திருத்தியதும் தெரிந்தது. வீட்டில் சோதனை இந்த வழக்கை முதலில் விசாரித்த சி.ஐ.டி., போலீசார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார், பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் தான் வழக்கின் முக்கிய சூத்திரதாரிகள் என்பது தெரிந்தது. தற்போது வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, ஈ.டி., எனும் அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. சிறையில் இருந்த ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னாலேயை காவலில் எடுத்து விசாரித்தனர். பசவராஜ் கன்னாலேயின் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனையும் நடத்தியது. இந்த சோதனையின் போது பசவராஜ் கன்னாலே வீட்டில் இருந்து முக்கிய டைரி சிக்கியது. முக்கிய புள்ளிகள் அந்த டைரியில், எந்தெந்த தேர்வர்களிடம், 'டீலிங்' பேசப்பட்டது; ஒவ்வொருவரிடம் இருந்தும் எவ்வளவு பணம் கேட்கப்பட்டது; முன்தவணையாக எவ்வளவு பணம் பெறப்பட்டது; பாக்கி எவ்வளவு பணம் வர வேண்டியுள்ளது; எந்தெந்த வங்கிக்கு பணம் அனுப்ப கூறப்பட்டது; வங்கிக் கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு என்பது உட்பட பல விபரங்களும், சில முக்கிய புள்ளிகள் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தன. பிரமாண பத்திரம் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வர்கள் பெயர்கள், முக்கிய புள்ளிகள் யார் என்ற தகவல்களை அமலாக்கத்துறை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். விசாரணையின் போது, இன்னும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானதால், தேர்வில் வெற்றி பெற்ற யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தினர். நாங்கள் தேர்வில் முறைகேடு செய்யவில்லை என்று, அரசிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினர். 'யாரோ செய்த தவறுக்காக கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை அரசு தண்டிக்க கூடாது' என்றும் கோரிக்கை வைத்தனர். பணி நியமன ஆணை வழங்காவிட்டால், வரும் நாட்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்து உள்ளனர். இதேபோன்று பா.ஜ., ஆட்சியில் எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு நடந்தபோது, பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. ஆணை வழங்க கோரி போராட்டங்கள் நடந்தன. அதன்பின் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மறுதேர்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை