தர்ஷன் ரசிகர்களுக்கு விஜயலட்சுமி அறிவுரை
தாவணகெரே: 'நடிகர் தர்ஷன் ரசிகர்கள் யாரும் கோபம் அடைய வேண்டாம்' என அவரது மனைவி விஜயலட்சுமி அறிவுரை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் நடிகர்கள் கிச்சா சுதீப், தர்ஷன் என இருவருக்கும் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொள்வர். அதுபோல, 'மார்க்' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில், படத்தின் கதை குறித்து கிச்சா சுதீப் பேசினார். இதில், சில வசனங்கள் சிறையில் உள்ள தர்ஷனையும், அவரது ரசிகர்களையும் கேலி செய்யும் விதமாக பேசப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதனால் தர்ஷனின் ரசிகர்கள், சுதீப்பின் ரசிகர்களை அநாகரீகமாக பேசி கருத்துகளை பதிவிட்டனர். பதிலுக்கு சுதீப்பின் ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தாவணகெரேவில் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பேசுகையில், ''என் கணவர் சிறையில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவரையும், அவரது ரசிகர்களையும் பலரும் கேலி செய்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் ரசிகர்கள் யாரும் கோபம் அடைய வேண்டாம்,'' என்றார்.