உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா வழக்கில் 224 தொகுதிகளிலும் பா.ஜ., போராட்டம் மேலிடத்திடம் செல்வாக்கை நிரூபிக்க விஜயேந்திரா வியூகம்

தர்மஸ்தலா வழக்கில் 224 தொகுதிகளிலும் பா.ஜ., போராட்டம் மேலிடத்திடம் செல்வாக்கை நிரூபிக்க விஜயேந்திரா வியூகம்

கர்நாடக பா.ஜ., தலைவராக இருப்பவர் விஜயேந்திரா. இவர், மாநில தலைவராக நியமிக்கப்பட்டபோது, கட்சியினர் 'ஆஹா... ஓஹோ...' என்று கொண்டாடினர். நாட்கள் செல்ல செல்ல எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ் உள்ளிட்டோர் விஜயேந்திராவுக்கு எதிராக அசியல் செய்தனர். தற்போது, இவர்களுடன் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவும் இணைந்துள்ளார். விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து மாற்றியே தீர வேண்டும் என்று, அவர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். ஆனால், விஜயேந்திராவிடம் இருந்து, தலைவர் பதவியை பறிக்க பா .ஜ., மேலிடம் யோசிக்கிறது. இதற்கு காரணம், அவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்; பா.ஜ.,வின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான். ஆனாலும் தலைவர் மாற்றம் நடக்காவிட்டால், கட்சிக்குள் பல அணிகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. 'எக்ஸ்' பதிவு இதனால் கர்நா டக பா.ஜ., தலைவரை மாற்றும் விஷயம் தொடர்பாக, பா.ஜ., மேலிடமும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆனாலும் தலைவர் பதவியை விட்டுத்தர விஜயேந்திராவுக்கு மனம் இல்லை. ஏதாவது செய்து பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளார். அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 'எக்ஸ்' வலைத்தளத்தில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி பதிவு வெளியிடுகிறார். இந்நிலையில் தர்மஸ்தலா விவகாரம் மூலம், தன் பதவியை தக்கவைக்க, விஜயேந்திரா, 'பிளான்' போட்டுள்ளார். இவ்வழக்கை எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு கொடுத்தது தவறு என்று கூறுவதுடன், சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மஞ்சுநாதர் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த, திட்டங்களை வகுத்து வருகிறார். தர்மஸ்தலாவில் தற்போது பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்து உள்ள நிலையில், மாநிலத்தின் 224 தொகுதிகளின் தலைநகரிலும், போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறார். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தயார் செய்யும்படி, மாவட்ட பா.ஜ., தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதுதவிர அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் இருந்தும், தர்மஸ்தலாவுக்கு வாகன பேரணி செல்லும்படி தலைவர்கள், தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தர்மஸ்தலா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேயை அடிக்கடி சந்தித்து, தன் ஆதரவு, கட்சி ஆதரவையும் தெரிவித்து வருகிறார். தர்மஸ்தலாவை பாதுகாக்கும் போராட்டத்தின் மூலம், கட்சி மேலிட தலைவர்களின் நம்பிக்கையை பெற்று, தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பது, விஜயேந்திராவின் திட்டமாக உள்ளது. இதற்கு மஞ்சுநாதரும், அன்னப்ப சுவாமியும் கைகொடுப்பரா என்பது, வரும் நாட்களில் தெரிந்துவிடும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ