யானை மிதித்து இருவர் பலி கிராமத்தினர் அதிர்ச்சி
சிக்கமகளூரு: கீரை பறிக்க, வனப்பகுதிக்கு சென்ற பா.ஜ., பிரமுகர் உட்பட இருவரை, காட்டு யானை மிதித்துக் கொன்றதால் மாவட்டத்தில் பதற்றம் நிலவியது. சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவின் கெரேகட்டே கிராமத்தில் வசித்தவர் ஹரிஷ், 47; பா.ஜ., பிரமுகர். இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். இதே கிராமத்தில் வசிப்பவர் உமேஷ் கவுடா, 44. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கெரேகட்டே கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. உமேஷ் கவுடாவும், ஹரிஷும் நேற்று அதிகாலை, கீரை பறிப்பதற்காக, தோட்டத்துக்கு சென்றனர். வழியில் திடீரென காட்டு யானை எதிரே வந்தது. திடீரென வந்ததால், அவர்களால் தப்பியோட முடியவில்லை. யானையிடம் சிக்கினர்; இருவரையும் யானை மிதித்துக் கொன்றது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இருவரை கொன்ற காட்டு யானை, சம்பவ இடத்திலேயே சுற்றுவதால், இருவரின் உடல்களை மீட்க முடியாமல், பல மணி நேரம் வனத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. யானையை விரட்டிய பின், உடல்களை மீட்டனர். ஒரே நேரத்தில் இருவரை, காட்டு யானை மிதித்துக் கொன்றதால், கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யானைகளின் தொந்தரவை கட்டுப்படுத்தாத அதிகாரிகளை, கிராமத்தினர் கண்டித்தனர்.