காகினாலே மடத்திற்கு விஸ்வநாத் எச்சரிக்கை
மைசூரு : “குருபா சமூகத்தை எஸ்.டி., பிரிவில் சேர்க்கும் விஷயத்தில், முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்,” என, காகினாலே மடத்திற்கு, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தங்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்க வலியுறுத்தி, இதற்கு முன் குருபா சமூகத்தினர் நடத்திய பாதயாத்திரையை சித்தராமையா விமர்சித்தார். தற்போது அவருக்கு அச்சமூகம் மீது திடீர் பாசம் வந்துள்ளது. அவர் ஏதோ சிக்கலில் உள்ளார். அதில் இருந்து தப்பிக்க சமூகத்தை கேடயமாக பயன்படுத்த பார்க்கிறார். காகினாலே குருபா மடத்தை சேர்ந்தவர்கள், சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். அவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி போராடி அரசியல் செய்தால், நீங்கள் அதற்காக வருத்தப்பட வேண்டி இருக்கும். சித்தராமையாவுக்கும், மடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மடத்தின் முதல் தலைவராக பணியாற்றி உள்ளேன். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.