பண்டிப்பூர் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை
சாம்ராஜ்நகர்: 'பண்டிப்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், வனப்பகுதி சாலையில் வாகனத்தை நிறுத்தினால், அபராதம் வசூலிப்பதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என வனத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து, பண்டிப்பூர் வன அதிகாரி பிரபாகரன் கூறியதாவது: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பண்டிப்பூர் தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். வனப்பகுதி வழியே கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இணைப்பு ஏற்படுத்துகின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. வனப்பகுதி சாலையில் செல்லும் பயணியர், சுற்றுலா பயணியர் வன விலங்குகளை கண்டால், வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். சிலர் விலங்குகளின் முன் நின்று 'செல்பி' எடுக்க முற்படுகின்றனர். இதனால் அவர்கள் விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்களும் நடந்துள்ளன. சமீபத்தில் சுற்றுலா பயணி ஒருவர், காட்டு யானையுடன் செல்பி எடுக்க சென்ற போது, கோபமடைந்த யானை அவரை விரட்டி வந்தது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பயணியரின் இத்தகைய தொந்தரவால், வன விலங்குகளின் சுதந்திரமான வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வனப்பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது என, பல முறை உத்தரவிட்டும், வாகன பயணியர் பொருட்படுத்துவது இல்லை. எனவே பயணியரை கண்காணிக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். முதற்கட்டமாக தமிழகத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும், தேசிய நெடுஞ்சாலை - 67ல், மூன்று இடங்களில் சோலார் அடிப்படையிலான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணியரின் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களில் இருந்து கீழே இறங்கினால், எங்களுக்கு மெசேஜ் வரும் மென்பொருளை வடிவமைத்துள்ளோம். இதே போன்று, கேரளாவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை - 766லும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவோம். பண்டிப்பூரின் மூலெஹொளே, கெக்கனஹள்ளா செக்போஸ்ட்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் போர்டுகள் வைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், வனப்பகுதி சாலையில் வாகனத்தை நிறுத்தினால், 25,000 ரூபாய் அபராதம் செலுத்துவதுடன், சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டி வரும். இவ்வாறு அவர் கூறினார்.